நபர் ஒருவரை தாக்கிய மாநகர சபை உறுப்பினர் கைது..!
நபர் ஒருவரை தாக்கிய மாநகர சபை உறுப்பினர் கைது
முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேரா தலைமையில் இன்று (28) பிற்பகல் களுத்துறை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் களுத்துறை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை மாநகர சபை உறுப்பினர் ஜெயநாத் நவரத்ன என்பவரே களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், போராட்ட இடத்திற்கு அருகில் தனது வாகனத்தை நிறுத்தி, “சோறு உண்ணும் மாடுகள் இன்னும் இருக்கின்றனவா? என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த மாநகர சபை உறுப்பினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
வாதுவ, பொத்துபிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தாக்குதலின் பின்னர் அவர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, குறித்த நபர் தமது அமைதியான போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து அந்த மாநகர சபை உறுப்பினரும் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், தாக்குதலுக்கு உள்ளானவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேராவிடம் கேட்டபோது, இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள போதிலும், தான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

