யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!
யாழ்ப்பாணம் பகுதியில் நிலவும் காற்று மாசடைவைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவதைக் குறைப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கோரி, அந்த பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவர் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது.
மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தமது வாதங்களை முன்வைத்தார். யாழ்ப்பாணத்தில் திறந்தவெளியில் கழிவுகள் எரிக்கப்படுவதால் பாரிய அளவில் காற்று மாசடைவு ஏற்படுகிறது.
இந்த மாசடைவு காரணமாகப் பொதுமக்கள் மத்தியில் நோய்த்தாக்கங்கள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பான ஆதார அறிக்கைகளையும் சமர்ப்பித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் ஆயம், யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியன இணைந்து, காற்று மாசடைவைக் குறைக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

