194 பில்லியன் டொலர் ஜேர்மன் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து மீட்க வலியுறுத்தல்!
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தனது பில்லியன் கணக்கிலான தங்க இருப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் என ஜெர்மனி அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய தங்க இருப்பைக் கொண்ட நாடு ஜெர்மனி. ஜெர்மனியின் மொத்த இருப்பில் சுமார் 1,236 தொன் தங்கம் (சுமார் 37%) நியூயார்க்கில் உள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சந்தை விலையின்படி, இதன் மதிப்பு சுமார் 194 பில்லியன் டொலர் (இந்திய ரூபாயில் சுமார் 16 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்) ஆகும்.
அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் சர்வதேச உறவுகளில் நிலவும் மாற்றங்கள் காரணமாக, நாட்டின் சொத்துக்களைச் சொந்த மண்ணிலேயே வைத்திருப்பது பாதுகாப்பானது என ஜெர்மனி கருதுகிறது.
அவசர காலங்களில் அல்லது பொருளாதார நெருக்கடி காலங்களில் தங்கத்தை உடனடியாகப் பயன்படுத்துவதற்கு, அது உள்நாட்டிலேயே இருப்பது அவசியம் எனப் பொருளாதார நிபுணர்கள் வாதிடுகின்றனர்.
“எங்கள் தங்கம் எங்கள் மண்ணில் இருக்க வேண்டும்” என்ற முழக்கத்துடன், வரி செலுத்துவோர் சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த அழுத்தத்தை ஜெர்மனி மத்திய வங்கிக்கு (Bundesbank) அளித்து வருகின்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிலவிய பனிப்போர் சூழலில், பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜெர்மனி தனது தங்கத்தை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சேமித்து வைத்தது. 2013 முதல் 2017 வரை ஒரு பகுதி தங்கத்தை ஜெர்மனி ஏற்கனவே மீட்டெடுத்த நிலையில், தற்போது எஞ்சியிருக்கும் பெரும் பகுதியை மீட்க வலியுறுத்தப்படுகிறது.
இது போன்ற உலகளாவிய பொருளாதாரச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களைப் பின்தொடருங்கள்!


