மன்னார் பிரதேச சபையில் சலசலப்பு – தவிசாளருக்கு எதிராக 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையில் சலசலப்பு – தவிசாளருக்கு எதிராக 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8-வது அமர்வு நேற்று (திங்கட்கிழமை, ஜனவரி 19, 2026) நடைபெற்றபோது, தவிசாளரின் தன்னிச்சையான போக்கைக் கண்டித்து இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் உட்பட 6 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

 

கடந்த ஏழு அமர்வுகளில் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் தவிசாளர் செயல்படுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

மேலும் கிராமங்களுக்கு வழங்கப்படும் மின் குமிழ்கள் (Street Lamps) விநியோகத்தில் தவிசாளர் பாரபட்சம் காட்டுவதாகவும், மற்ற உறுப்பினர்களுக்கு 10-15 வழங்கப்பட்ட நிலையில், தவிசாளர் தனது தொகுதிக்கு மட்டும் 61 மின்குமிழ்களைப் பயன்படுத்தியதாகவும் சாடினர்.

 

அத்துடன் அண்மையில் ஏற்பட்ட புயல் அனர்த்தத்தின் போது, சேதங்கள் குறித்த விபரங்களை முறையாகச் சமர்ப்பித்து அரசாங்க நிதியைப் பெற தவிசாளர் தவறிவிட்டதாக உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

 

மக்கள் பிரதிநிதிகளின் விவாதங்களைச் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாமல், பூட்டிய அறையினுள் அமர்வு நடத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

 

சபையில் மொத்தம் 22 உறுப்பினர்கள் உள்ள நிலையில், நேற்றைய அமர்வில் 17 பேர் கலந்துகொண்டனர். இதில் தமிழரசு கட்சியின் 5 உறுப்பினர்களும், ஒரு சுயேட்சை உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர். ஏனைய உறுப்பினர்களும் தவிசாளரின் செயல்பாட்டில் அதிருப்தியில் உள்ள போதிலும், கட்சி கட்டுப்பாடுகள் காரணமாகச் சபையில் நீடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin