பிரஜாசக்திக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்பு..!
பிரஜாசக்தி என்ற பெயரில் உள்ளூராட்சி சபைகளின் சேவைகளை திசை திருப்ப அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தைப்பொங்கல் விழா இன்று வடமராட்சி மடத்தடி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஒரு கட்சியாக நாங்கள் ஒரு முடிவை எடுத்திருக்கிறோம். ஜனாதிபதி அவர்கள் கலந்துகொள்கின்ற இந்த அரச பொங்கல் விழாவிலே நாங்கள் கலந்துகொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளோம்.”
“இதற்குப் பிரதானமான காரணம், அரசாங்கத்தினால் ‘பிரஜாசக்தி’ என்ற பெயரில் அரச இயந்திரத்திற்கு இணையாகத் தங்களது கட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு அல்லது வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகும்.”
“உள்ளூராட்சி சபைகள் செய்ய வேண்டிய பல சேவைகளை அவர்கள் திசை திருப்பி, விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கிலே தங்களுக்கு உள்ளூராட்சி சபை அதிகாரங்கள் கிடைக்காத காரணத்தினால், அதற்குச் சமாந்தரமாக வேறொரு அமைப்பைப் பயன்படுத்தி நேரடியாக அந்தப் பணிகளைச் செய்ய முற்படுகின்றனர்.”
“இது மிகவும் தவறான ஒரு விடயம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகள் செய்ய வேண்டிய பணிகளைச் சட்டப்படி அவர்கள்தான் செய்ய முடியும்.
அதற்கு மாறாக, மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி வறுமை ஒழிப்புத் திட்டம் என்ற போர்வையில் இந்த ‘பிரஜாசக்தி’ அமைப்பு செயற்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதனைச் சட்ட ரீதியாகவும் நாங்கள் சவாலுக்கு உட்படுத்துவோம்.” என்றார்.

