அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகளே அகற்றப்பட்டுள்ளது..!
கந்தரோடை விகாரை, கதுருகொட விகாரை என பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகள் நேற்று (08) அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 30 ஆம் திகதி வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக குறித்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில், சுன்னாகம் சந்தைக்கு அருகில், மற்றும் வேறு இரண்டு இடங்களில் ‘கந்தரோடை விகாரை’ என திசை காட்டும் பெயர் பலகை நாட்டப்பட்டிருந்தது.
அத்தோடு சுன்னாகம் சந்தைக்கு அருகில் ‘கந்தரோடை விகாரை’ என பெயர் பலகை நாட்டப்பட்டிருந்த இடத்தில் தற்போது, சுன்னாகம் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும் எனவும் அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

