வீதியை புனரமைக்கக்கோரி பாரதிபுரம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..!
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருக்கின்ற வீதியை புனரமைத்து தரக்கோரி இன்று (09.01.2026) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இதன்போது “பாரதி வீதியின் பரிதாபம் பார் அரசே”, “சீரற்ற வீதியால் சீரழிகிறது எம் சிறார்களின் சீருடை”, “வீதியை புனரமைத்தால் எம் விதியை மாற்றுவோம்”, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
நீண்ட காலமாக பாரதிபுரம் மேன்கமம் பிரதான வீதி சுமார் 01 கிலோமீற்றர் தூரமும், பாரதி மகாவித்தியால வீதி 800 மீற்றர் தூரமும் இன்று வரை மண்வீதியாகவே காணப்படுகின்றது. மழை வெள்ளம் ஏற்படும் போது நீரில் மூழ்கி சேறும் பள்ளமுமாக காணப்படுகின்றது இந்த வீதியின் ஊடாகவே பாடசாலை மாணவர்கள் செல்லவேண்டியுள்ளது. இதனால் மாணவர்களின் சீருடைகள் அழுக்கடைகின்றது. இவ்வீதியால் பல கிராமத்து மக்கள் கிளிவெட்டி வைத்தியசாலைக்கு சென்று வருகின்றனர் அத்துடன் பெரும்பாலன விவசாயிகள் இவ்வீதியால் வயல்களுக்கு சென்று வருகின்றனர்
இதுவரை காலமும் கடந்த ஆட்சியாளர்கள் தாமதித்தைபோல் இந்த அரசும் தாமதிக்காது என்ற இந்த அரசின்மேல் எமக்கு இருக்கின்றது. எனவே இந்த பாரதிபுரம் கிராமத்தின் மக்களின் கஷ்டநிலையை புரிந்து கொண்டு விரைவாக இவ்வீதியை புனரமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

