சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் உஸ்மான் கவாஜா..!
சிட்னியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தாம் ஓய்வு பெறப்போவதாக உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார்.
39 வயதான கவாஜா, இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 16 சதங்கள் உட்பட 6206 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அத்துடன் 40 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 சதங்கள் மற்றும் 12 அரைச்சதங்களை பதிவு செய்துள்ளார்.
9 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள கவாஜா 241 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
தமது ஓய்வு குறித்து கவாஜா அறிவித்துள்ளதாவது,
இதைப் பற்றி நான் சில காலமாகவே சிந்தித்து வந்தேன். இந்தத் தொடருக்குள் நுழையும் போதே, இதுதான் எனது கடைசித் தொடராக இருக்கும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.
இது குறித்து எனது மனைவி ரேச்சலிடம் விரிவாகப் பேசினேன்.
நான் சில நாட்களுக்கு முன்பு பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டிடம் எனது முடிவைக் கூறியபோது கூட, 2027 இந்தியத் தொடருக்கு என்னை எவ்வாறு அழைத்துச் செல்வது என்றே அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
எனது சொந்த விருப்பத்தின் பேரில், கௌரவமான முறையில், எனக்குப் பிடித்தமான சிட்னி மைதானத்தில் விடைபெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தத் தொடரின் ஆரம்பம் சற்று கடினமாக இருந்தது. அடிலெய்ட் போட்டியில் முதலில் நான் தெரிவு செய்யப்படாத போதே, இதுதான் நான் விலகுவதற்கான சரியான நேரம் என்பதை உணர்ந்தேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை ஓய்வு பெறுவது குறித்து யோசித்ததாக கவாஜா வெளிப்படுத்தியுள்ளார்.
நான் சுயநலத்திற்காக அணியில் இருப்பதாக மக்கள் கூறியது எனக்கு வருத்தமளித்தது. ஆனால் மெக்டொனால்ட் இல்லை, நீங்கள் விளையாட வேண்டும் இலங்கைத் தொடருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கும் உங்களது தேவை இருக்கிறது என்று கூறினார்.
அதனால்தான் நான் தொடர்ந்தேன் என கவாஜா விளக்கமளித்தார்.
சிட்னி டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், பிபிஎல் தொடரில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக கவாஜா உறுதிப்படுத்தியுள்ளார்.

