கடந்த ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபை பெற்ற வசூல்..!
நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த ஆண்டில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் 285 மில்லியன் ரூபாவிற்கும் அதிக அபராதத் தொகையினை வசூலித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 21,000 சோதனைகளின் ஊடாக தொடரப்பட்ட வழக்குகளின் ஊடாகவே இந்த அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக உணவு மற்றும் உணவு அல்லாத 223 தயாரிப்பு மாதிரிகளை அதிகாரசபை பரிசோதித்துள்ளது.
எஃகு கம்பிகள், தேங்காய் எண்ணெய், அழகுசாதனப் பொருட்கள், அரிசி, டின் மீன், மிளகாய்த் தூள், பால், முடி சாயங்கள், சிரப் வகைகள் உள்ளிட்ட பல பொருட்கள் இதில் அடங்குவதாக அந்த அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1977 என்ற நுகர்வோர் முறைப்பாடு சேவை இலக்கத்திற்கு கடந்த ஆண்டில் மாத்திரம் 5,002 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அவற்றில் சுமார் 79 சதவீத முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

