கல்முனை காவல் நிலையத்தில் சத்தியப்பிரமாணத்துடன் தொடங்கிய புத்தாண்டு..!
மலர்ந்துள்ள 2026ஆம் ஆண்டின் முதல் நாளில், நாட்டின் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இதன் ஒரு அங்கமாக, அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இன்று (01) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சி தலைமையில் இன்று காலை தேசியக் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து, நாட்டிற்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் பிரதம அதிதியாகப் பங்கேற்றார். கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் அனைவரும் புதிய ஆண்டிற்கான சத்தியப்பிரமாணத்தைச் செய்துகொண்டதுடன், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறித் தமது கடமைகளைத் தொடங்கினர்.

