மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக, இனி போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஜி.ஜே. சேநாதீர இதனைத் தெரிவித்தார்.
கிரிமினல் வழக்கின் கீழ் நடவடிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே இதற்கு முதன்மைக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, போதையில் அபாயகரமாக வாகனம் செலுத்தி உயிரிழப்பு அல்லது பாரிய விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் (Criminal Law) கீழ் வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸ் மா அதிபர் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் பொலிஸ் தரவுகளின்படி, கடந்த வருடத்தை விட இந்த வருடம் விபத்துக்களின் எண்ணிக்கை 271 ஆல் அதிகரித்துள்ளது. விபத்துக்களால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 317 ஆல் உயர்ந்துள்ளது.
எனினும், பாரிய காயங்களுடன் கூடிய விபத்துக்கள் சற்று குறைந்துள்ளதாக சேநாதீர குறிப்பிட்டார்.
பாதிக்கப்படுவோர் யார்? தினசரி விபத்து ஆய்வுகளின்படி, பாதசாரிகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
வருடாந்த வீதி விபத்துக்களில் 31 வீதமானோர் பாதசாரிகள் என்பதுடன், அதற்கு அடுத்ததாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் த்ரீவீலர் சாரதிகள் அதிகளவில் உயிரிழக்கின்றனர்.
“சாரதிகளின் கவனக்குறைவே விபத்துக்கள் அதிகரிக்கப் பிரதான காரணம்” எனத் தெரிவித்த அவர், இனிவரும் காலங்களில் போதையில் வாகனம் செலுத்துவது சாதாரண போக்குவரத்து விதிமீறலாகக் கருதப்படமாட்டாது எனவும், அது குற்றவியல் குற்றமாகவே கையாளப்படும் எனவும் கடும் எச்சரிக்கை விடுத்தார். நாடு முழுவதும் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் பொலிஸார் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

