கொழும்பு மாநகராட்சியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் பியசேன ரணசிங்க, கணக்காளர் ஈ. ஆர். எம். எஸ். எச். ஏக்கநாயக்க மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கொழும்பு மாநகராட்சியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், மோசடி, குற்றவியல் நம்பிக்கை துரோகம், சொத்துக்களை முறையற்ற முறையில் கையாளுதல் போன்ற விடயங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச வளங்கள் மற்றும் வரப்பிரசாதங்களை துஷ்பிரயோகம் செய்தல், சட்டவிரோத ஆட்சேர்ப்பு மற்றும் நியமனங்கள், சட்டவிரோத திட்டங்கள், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடும்போது இடம்பெற்ற முறைகேடுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்தல் ஆகிய பணிகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

