ஆர்க்டிக் துருவ குளிரில் பிரித்தானிய போர் விமானங்கள் திணறலாம்!
ஆர்க்டிக் (Arctic) பகுதியில் பிரித்தானிய விமானப்படை செயல்பட திணறக்கூடும் என்று விமானப்படை தலைவர் சேர் ஹார்வ் ஸ்மித் (Sir Harv Smyth) தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் 35 டிகிரி வெப்பநிலையில் பிரித்தானிய விமானப்படை சிறப்பாக செயல்பட்டுள்ளது.
ஆனால் -30 டிகிரி குளிரில் திறம்பட செயல்படும் திறனை பிரித்தானிய விமானப்படை இழந்துவிட்டதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள ரோயல் வானூர்தி சபையில் (Royal Aeronautical Society) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சேர் ஹார்வ் (Sir Harv) இதனை கூறியுள்ளார்.
“நமது விமானப்படை மத்திய கிழக்கில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் -30 டிகிரி குளிரில் செயல்பட முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
பனிப்போர் காலத்தில் ஆர்க்டிக் (Arctic) பகுதியில் போர் புரிவதில் பிரித்தானிய இராணுவம் நிபுணத்துவம் பெற்றது. ஆனால் அதன் பின்னர் வெப்பமான காலநிலையில் பறப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இதனால் ஆர்க்டிக் (Arctic) பகுதியில் விமானப்படையை நிலைநிறுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கு சூடான ஆடைகள் மற்றும் விமானங்களை இயக்க ஜெனரேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குளிர் காலநிலையில் வேலை செய்யும் திறனை பொறியாளர்கள் மீண்டும் பெற வேண்டும் என்று சேர் ஹார்வ் (Sir Harv) கூறியுள்ளார்.
இந்த ஆண்டு துருவ பகுதிக்கு கடற்படை போர் கப்பல்களை அனுப்பும் என்று சேர் கியர் ஸ்டாமர் கூறியுள்ளார்.
3.2 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான HMS Prince of Wales விமானம் தாங்கி கப்பல் F-35b போர் விமானங்களுடன் ஆர்க்டிக் பகுதிக்கு செல்ல உள்ளது.
ரஷ்யாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பா தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
கடந்த மாதம் கிரீன்லாந்தைடென்மார்க்கிடம் இருந்து வாங்க டிரம்ப் முயற்சித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே!
கடந்த வாரம் மியூனிச் (Munich) பாதுகாப்பு மாநாட்டில் பேசிய பிரித்தானிய பிரதமர், “நாம் போராட தயாராக இருக்க வேண்டும். நமது மக்கள், நமது மதிப்புகள் மற்றும் நமது வாழ்க்கை முறையை பாதுகாக்க என்ன செய்தும் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
“ஐரோப்பா தனது சொந்த காலில் நிற்க வேண்டும். அதற்கு தைரியமாக செயல்பட வேண்டும். குறுகிய கால கவலைகளை விட்டுவிட்டு ஐரோப்பாவை பலப்படுத்த வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

