ரணில் – சஜித் இடையில் விரைவில் சந்திப்பு: அரசியல் களம் சூடுபிடிக்கிறது!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றை ஒன்றிணைத்து, எதிர்வரும் தேர்தல்களில் பலமான கூட்டணியாகப் பயணிப்பது குறித்த தீர்க்கமான பேச்சுவார்த்தை ஒன்று விரைவில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இந்த நேரடிச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பது தொடர்பாக ஏற்கனவே நியமிக்கப்பட்ட குழுக்கள் பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இணைந்து பயணிப்பதில் இணக்கம் காணப்பட்டாலும், அது ஒரு தனிப்பட்ட கட்சியாகவா அல்லது கூட்டணியாகவா என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை.
தற்போதைய சூழலில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சியின் உயர்மட்ட ஆலோசகராக இருந்து வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்பு சிரேஷ்ட உறுப்பினர்களின் தலையீட்டில் அமையவுள்ள இந்த நேரடிச் சந்திப்பு, நாட்டின் எதிர்கால அரசியல் போக்கை தீர்மானிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

