யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்..!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்..!

26.12.2025

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (26.12.2025) பி.ப 01.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றுகையில், கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்ட செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதி என்பது முதன்மையான இடத்தை பெற்றுள்ளதாகவும் அந்த வகையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட அனுமதிகளின் பிரகாரம் மாவட்ட, மாகாண நிர்வாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருட இறுதி நாட்களில் இங்கு கூடியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்தவரை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயல்களுக்கான செலவீனங்களாக மீண்டெழும் செலவினமாக 2473.90 மில்லியன் ரூபாவும், மூலதன செலவீனமாக 227 மில்லியன் ரூபாவுமாக மொத்தமாக 2700.90 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், நேற்றைய தினம் வரை அதற்குரிய செலவீனமாக 2625.20 மில்லியன் ரூபா செலவழித்துள்ளதாகவும் 93.5 % மான நிதி முன்னேற்றத்தை எட்டி உள்ளதாகவும், மிகுதி செலவீனங்களை வேலை நாட்களுக்குள் செலவழிக்க உறுதிச் சீட்டுகள் கைவசம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஏனைய அமைச்சுக்கள் சார்பாக மீண்டும் வரும் செலவீனமாக 2527 மில்லியன் ரூபாவும், மூலதன செலவீனமாக 2649.30 மில்லியனுமாக

மொத்தம் 5168.80 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் நேற்றைய தினம் வரை 4210 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளதாகவும், 81.5 % மான செலவீனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தீவு பகுதிக்கான அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை செலவு செய்வதில் வெள்ள இடர்பாடு காரணமாக சில போக்குவரத்து இடர்பாடுகளை எதிர்கொண்டதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மொத்தமாக 7869.8 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் 6735.80 மில்லியன் ரூபா இதில் செலவு செய்துள்ளதாகவும் 86% மான செலவீனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மேலதிகமாக அனர்த்த நிலைமை காரணமாக யாழ்ப்பாண

மாவட்டத்தில் 20023 குடும்பங்களில் 64,498 பேர் பாதிப்புக்குள்ளானதாகவும் தெரிவித்தார். மேலும், அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் உரிய வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கியதாக அமைந்துள்ளதாகவும், மாவட்ட அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கிய கௌரவ அமைச்சர், ஆளுநர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்,கிராம மாவட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் இன்றைய கூட்டமானது பௌதீக ,நீதி முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டதுடன் அடுத்த வருடமும் மாவட்ட அபிவிருத்தி பணியில் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.

 

வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் தமது தொடக்கவுரையில், வெள்ள அனர்த்தத்தின் நிலைமையிலும் அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியதில் மேம்பாடு காணப்படுவதாகவும், வெற்றிகரமான அபிவிருத்தி நோக்கிய பயணம் காணப்படுவதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனக்குறிப்பிட்டு தமது புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

 

ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், “டித்வா” புயல் அனர்த்தத்தின் போது உயரிழந்த பொதுமக்கள், மீட்புபணியில் ஈடுபட்ட கடற்படை மற்றும் மின்சார சபை ஊழியர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், எமது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை அரசாங்க உத்தியோகத்தர்கள் செய்யமாட்டார்கள் என்று சொல்லப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்கள் தவிடுபொடியாகும் வகையில் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஓரணியில் அனர்த்த நிலைமைகளில் செயற்பட்டமைக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டம் வரவு செலவு திட்டத்தின் வேலைத் திட்டத்தில் நிதி மற்றும் பெளதீக முன்னேற்றத்தில் 100 % காண்பித்து தேசிய ரீதியில் முதலிடம் பெற்றமைக்காக அரசாங்க அதிபர் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும், எமது அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டம் வேகமாக நடைபெற்று வருகின்ற நிலையில், அனர்த்த நிலைமைகளில் சில காலதாமதம் ஏற்பட்டாலும், 2025 ஆம் ஆண்டினை கற்றுக் கொண்ட பாடத்திற்கு அமைவாக, அடுத்த வருடம் முறையான திட்டமிடலுடன் அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும் எனவும், அபிவிருத்தி மாத்திரமின்றி சமூகத்தின் பல்வேறுபட்ட சமூக அழிவுகளிலிருந்தும் மீட்க வேண்டும் எனவும் அதற்கான ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

 

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், நகர அபிவிருத்தி திட்டம், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டதுடன், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட விடயங்கள், தீர்வு காணப்பட வேண்டிய விடயங்களும் மற்றும் எல்லைதாண்டி மீன் பிடி உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

 

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சிவஞானம் சிறீதரன், கெளரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கெளரவ கருணாநாதன் இளங்குமரன், கெளரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கெளரவ வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin