NPP உறுப்பினர்கள் மீது ஒப்பந்த மோசடி குற்றச்சாட்டு..!
கம்பஹா பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள், அரசாங்க ஒப்பந்தங்களைத் தமது பெயரில் செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அப்பிரதேச சபையின் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நேற்று (07) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, உள்ளூராட்சி சபைகள் கட்டளைச் சட்டத்தின் படி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஒப்பந்தங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது எனத் தொடர்புடைய உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினர்.
அத்துடன் அவ்வாறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு பணம் பெற்றுக்கொள்வது அவர்களது உறுப்புரிமை இரத்துச் செய்யப்படுவதற்கு ஏதுவான ஒரு காரணியாகும் எனவும் சுட்டிக்காட்டிய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இச்செயற்பாடு தொடர்பில் மேல் மாகாண ஆளுநரிடமும் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த உறுப்பினர்கள் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த டிசம்பர் மாத சபை அறிக்கையில் அசோக குமார என்ற உறுப்பினரும், தர்மவன்ச என்ற உறுப்பினரும் பெற்றுக்கொண்ட பணம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி சஹன் பிரசாத் என்ற உறுப்பினர் பணம் பெற்றுக்கொண்ட விதமும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தின் படி நிதி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது. இந்த நிதி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டால் உறுப்புரிமை இரத்துச் செய்யப்படும். அடுத்த சபை அமர்வு 10 ஆம் திகதி உள்ளது. வாசிக்கும் திறன் கொண்டவர்கள் தானே இருக்கிறார்கள். வெட்கம் இருந்தால் சட்டத்தை வாசித்துப் பார்த்துவிட்டு சபைக்கு வரவேண்டாம்.” என்று கூறினர்.
இதற்கிடையில் கம்பஹா பிரதேச சபையின் தவிசாளரும் மாதாந்தம் 500 லீற்றர் எரிபொருளைப் பெற்றுக்கொண்டு பணத்தை வீண்விரயம் செய்வதாகவும் அந்த உறுப்பினர்கள் குழு குற்றம் சுமத்தியது.
தவிசாளர் இரண்டரை இலட்சம் ரூபா மாதாந்த வாடகை அடிப்படையில் மோட்டார் வாகனம் ஒன்றையும் பெற்றுக்கொண்டு சபையின் பணத்தை வீண்விரயம் செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
“இவர்கள் சபையின் பணத்தைச் சேமிப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்து பெருமளவான மக்களின் வாக்குகளைப் பெற்றார்கள். ஆனால் இன்று பிரதேச சபையின் தவிசாளர் மாதத்திற்கு 5 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளார். அவர் பயன்படுத்தும் வாகனம் வாடகை அடிப்படையில் மாதாந்தம் இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாவுக்குப் பெறப்பட்டுள்ளது. அவர் 500 லீற்றர் டீசலைச் சபையின் நிதியிலிருந்து பெற்றுள்ளார். பிரதேச சபையின் தவிசாளர் இவ்வாறு எடுத்துக்கொள்ள அவர் என்ன இலங்கையின் ஜனாதிபதியா? இவர்கள் மக்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி விசேட வரப்பிரசாதங்களைப் பெறுகின்றனர். இவர்கள் களைகளைப் பிடுங்கிவிட்டு மலர்ச்செடிகளை நடுவதாகக் கூறித்தான் சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இப்போது அந்த மலர்ச்செடிகள் சும்மாவே களைகளாக மாறிவிட்டன.” என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

