நான் ஒரு நாளைக்கு இருபது முப்பது தடவை இங்கே வந்து தேடுகிறேன். தயவுசெய்து யாராவது வந்து என் மகளை வெளியே எடுத்துத் தாருங்கள்” என மண்சரிவில் தமது மகளை தொலைத்த பதுளை – கந்தகெட்டிய – நாகொல்ல பகுதியைச் சேர்ந்த கே.எம். பண்டார மெணிக்கே (50) என்ற தாய் கண்ணீருடன் கதறுகிறார்.
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய நாகொல்ல கிராமத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் மகளான எம்.ஜி. காயத்ரி காவிந்தி ராஜபக்ஷ (21) என்ற யுவதி காணாமல் போயுள்ளார்.
சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகின்ற போதிலும் அவரைப் பற்றி எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை. அதேவேளை, யுவதியின் பாட்டனார் எம்.ஜி. நேட்ரிஸ் (82) மற்றும் பாட்டி டி.ஏ.பியசீலி திஸாநாயக்க (72) ஆகியோரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
இந்த மண்சரிவில் இந்த மூவரைத் தவிர, நாகொல்ல கிராமத்தைச் சேர்ந்த மேலும் இருவரும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
தமது குடும்பத்துக்கு ஏற்பட்ட இந்தச் சோகத்தைப் பற்றி காணாமல் போன மகளின் தாய், பண்டார மெணிக்கா பின்வருமாறு விபரித்தார்.
“கடந்த 24ஆம் திகதி முதல் மூன்று நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்தது. சம்பவ தினமாக 27ஆம் திகதி பிற்பகல் நானும் மகளும் மேலிருந்த வீட்டில்தான் இருந்தோம்.
கணவர் விசேட அதிரடிப்படையில் பணிபுரிகிறார்.
எங்கள் வீட்டுக்குக் கீழேதான் என் அம்மாவும் அப்பாவும் வசித்தார்கள். சம்பவ தினத்தன்று மகளும் நானும் அம்மாவின் வீட்டுக்கு அருகில் இருந்தோம். அப்பா வீட்டுக்குள் இருந்தார்.


