யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் சோகம்: நீந்தச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி!
யாழ்ப்பாணம் – பண்ணைக் கடல் பகுதியில் நீந்தச் சென்ற இளைஞர்கள் நால்வர் சுழியில் சிக்கியதில், இருவர் இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கொக்குவில் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் ஜெனீசன் மற்றும் உதயராஜா கஜந்தன் ஆகிய 17 வயதான இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் குறித்த விபரம்:
பண்ணைக் கடலில் நீந்தச் சென்ற நால்வர் எதிர்பாராதவிதமாகச் சுழியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ணுற்ற அப்பகுதியில் நின்ற பொதுமக்கள், உடனடியாகப் பொலிஸாரின் உதவியுடன் நீரில் மூழ்கிய நால்வரையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட நால்வரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், இவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. எஞ்சிய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


