செம்மணி அணையா விளக்கு மீண்டும் உடைப்பு: நினைவு தூபிக்குத் தொடரும் அவமதிப்பு!
யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில் உள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி மீண்டும் நேற்று முன் தினம் (டிசம்பர் 06, 2025) இரவு இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் சேதப்படுத்தும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நினைவுத் தூபியின் பின்னணி:
செம்மணியில் மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்ட பகுதியில், கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் அஞ்சலி செலுத்தும் வகையில் குறித்த அணையா விளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டது.
முன்னதாகச் சில மாதங்களுக்கு முன்னர், இதே தூபி சேதப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் இது உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நினைவுச் சின்னத்தை அவமதிக்கும் வகையிலும், அஞ்சலி செலுத்தும் உணர்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

