நாளைய வானிலை..!
நாளை அதாவது 07.12.2025 அன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியை மையமாகக் கொண்டு வளிமண்டல தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.
அத்தோடு அதிக ஈரப்பதன் கொண்ட கீழைக்காற்றுக்களின் வருகையும் இருக்கும்.
எனவே நாளை முதல் (07.12.2025) எதிர்வரும் 14.12.2025 வரை நாடு முழுவதும் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக 09.12.2025, முதல் 12.12.2025 திகதிகளில் நாடு முழுவதும் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக மத்திய மாகாணம், தென் மாகாணம், மேல் மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், வட மத்திய மாகாணம் போன்றவற்றின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிக முக்கியமாக மேற்குறிப்பிட்ட இந்த நாட்களில் மத்திய மாகாணம், ஊவா மாகாணம், மேல் மாகாணம், சபரகமுவா மாகாணம் போன்றன ஏனைய பகுதிகளை விட அதிக மழையைப் பெறும் வாய்ப்புள்ளன.
மலையக உறவுகளே…
மேலும் சில நாட்கள் நீங்கள் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களில் இருப்பது தான் சிறந்தது.
ஏனெனில்,
1. இன்றும் மலையகத்தின் பல பிரதேசங்களினதும் மண், ஈர உள்ளடக்கத்தை முழுமையாக கொண்டுள்ளது.
2. டிட்வா புயலின் பின்னர் இன்றுவரை ஆவியாக்கத்திற்குரிய (நீர் மற்றும் மண்) வெப்பநிலை நிலவவில்லை. மிகக் குறைவான சராசரி வெப்பநிலையே நிலவுகின்றது. குறிப்பாக கடந்த 03 நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் சராசரி வெப்பநிலையாக 11 பாகை செல்சியஸ் வெப்பநிலையே நிலவுகின்றது.
3. இன்னமும் பல நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன. ஆறுகள் முழுக் கொள்ளளவோடு பாய்கின்றன.
4. மலையகம் முழுவதுக்கும் அவ்வப்போது கன மழையைத் தரக்கூடிய வளிமண்டல தளம்பல் நிலை தென்மேற்கு இலங்கையில் நாளை உருவாகும் வாய்ப்புள்ளது.
இந்த சூழ்நிலைகள் மலையகத்தின் பல பகுதிகளிலும் மண்சரிவு அபாயத்தை உருவாக்கும். எனவே தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களில் இருப்பதே சிறப்பு.
இது தொடர்பான அதிகாரிகளும் மக்களுக்கு இது தொடர்பாக விழிப்பூட்ட வேண்டும்.
வடக்கு,கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் குளங்களின் நீர் மட்டத்தை தற்போது, முழு வழஙகல் மட்டத்தில்( Full Supply Level- FSL) பேணாமல் சற்று குறைந்த மட்டத்தில் பேணலாம்.
ஏனெனில் எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதி வரை வடகீழ்ப் பருவமழை கிடைக்கும் என்பதனால் பின்னாட்களில் கிடைக்கும் மழையை வைத்து முழுக்கொள்ளளவைப் பேணலாம்.
குறிப்பாக டிசம்பர் மாதத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது வாரத்தில் வங்காள விரிகுடாவில் இரண்டு காற்றுச் சுழற்சிகள் உருவாகி இலங்கை அருகே நிலை கொள்ளும் வாய்ப்புண்டு. எனினும் இதனை அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் அதாவது எதிர்வரும் 08.12.2025 முதல் 14.12.2025 வரை கனமழை கிடைக்கும் என்பதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளிலும், குளங்கள் வான் பாயும் பகுதிகளுக்கு அண்மித்தும், ஆறுகளுக்கு அண்மித்தும் உள்ள மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.

