யாழ். பழைய பூங்கா விளையாட்டரங்கு பணிக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!
யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வழக்குக்கான பின்னணி:
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில், பழைய பூங்காவில் உள்ள 12 பரப்பளவு காணியைக் கையகப்படுத்தி இந்த உள்ளக விளையாட்டரங்கை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
எதிர்ப்புக்கு காரணம்:
எனினும், பழைய பூங்கா பகுதியில் நூற்றாண்டு காலப் பழமையான மரங்கள் காணப்படுகின்றன. இந்த மரங்களை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என்று பலரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.
இந்தப் பின்னணியில், பழைய பூங்காவில் அமையவுள்ள விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மன்று, தற்போது இடைக்காலத் தடை கட்டளையைப் பிறப்பித்துள்ளது.

