தற்கொலை செய்துகொள்ள குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் மீட்பு..!

தற்கொலை செய்து கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் தேடி அநுராதபுரம் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

தற்போது பிரதேசவாசிகளினதும் உயிர்காக்கும் குழுவினரதும் உதவியுடன் அந்தத் தாயின் உயிரைக் காப்பாற்ற முடிந்துள்ளதுடன், இரண்டு குழந்தைகளையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயும், 4 வயது மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகளுமே இன்று (02) காலை 6.30 மணியளவில் அநுராதபுரம் நகருக்கு அருகாமையில் மல்வத்து ஓயாவில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாயின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், குடும்பத் தகராறு காரணமாக இவர் இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெண் ஒருவர் கத்தும் சத்தம் மல்வத்து ஓயா அருகே இருந்த ஒருவருக்குக் கேட்டதை அடுத்து, பிரதேசவாசிகளின் உதவியுடன் அந்த நபர் அப்பெண்ணை மீட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

தற்போது காணாமல் போன இரண்டு குழந்தைகளையும் தேடும் பணிகளில் அநுராதபுரம் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு ஈடுபட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin