இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா வழங்கும் ஆதரவுகளுக்கு நன்றி..!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (02) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இதன்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையின் நெருங்கிய நண்பராக எம்மோடு இணைந்து உயிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் இந்தியா ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக, இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் அவர் தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்தார்.

‘திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடித் தலையீட்டின் கீழ், இந்திய அரசின் ‘சாகர் பந்து’ திட்டத்தின் மூலம் கப்பல்கள், நிவாரணக் குழுக்கள் மற்றும் இந்திய விமானப்படையின் விசேட பங்களிப்பு என்பன இலங்கைக்குப் பெற்றுத் தரப்பட்டன. இதன் மூலம் பேரழிவால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களை மீட்க முடிந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், கூடாரங்கள், விசேட மீட்புக் குழுக்கள், வைத்தியர்கள், இராணுவ வீரர்கள், ஹெலிகொப்டர்கள், நடமாடும் வைத்தியசாலை சேவை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கம் வழங்கி வரும் இந்த ஆதரவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

பாகிஸ்தானிலிருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றி வரும் விமானங்கள் இலங்கையை வந்தடைவதற்கு, இந்திய வான் பரப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கி இந்திய அரசாங்கம் எடுத்த முக்கிய தீர்மானத்திற்கும் எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், அதற்காக இந்திய அரசாங்கத்திற்குத் தனது நன்றியையும் மரியாதையையும் வெளிப்படுத்தினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், இத்தகைய மனிதாபிமான தேவை எழுந்த நேரத்தில் இந்திய அரசாங்கம் எடுத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை மிகவும் பாராட்டுவதாகவும், நெருங்கிய நண்பராக இந்தியா இந்த நேரத்தில் இலங்கையுடன் இருப்பது எமது நாட்டிற்குப் பெரும் பக்கபலமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin