மட்டக்களப்பில் வெள்ளச் சேதம் தீவிரம்: வீதிகள் முற்றாகத் துண்டிப்பு, 850 பேர் இடம்பெயர்வு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் பல இடங்கள் வெள்ளக் காடாகக் காட்சியளிப்பதுடன், பிரதான போக்குவரத்து மார்க்கங்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.
குளங்களின் நீர்மட்டம் உயர்வு கடந்த 24 மணித்தியாலத்தில் உறுகாமம் பகுதியில் 300 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன் காரணமாகச் சிறிய குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
பிரதான குளங்களான உன்னிச்சைக்குளம் (27.4 அடி), உறுகாமம் குளம் (18.6 அடி) ஆகியவற்றின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து, வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வீதிப் போக்குவரத்துத் துண்டிப்பு வெள்ள நீர் வீதிகளை மூழ்கடித்துள்ளதால், மாவட்டத்தின் படுவாங்கரைக்கும் எழுவாங்கரைக்குமான பிரதான தரைவழிப் போக்குவரத்துகள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.
குறிப்பாகப் பட்டிருப்பு பாலம், மண்முனைப் பாலம், வவுணதீவுப் பாலம் உடனான பிரதான வீதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பலத்த காற்றினால், படகுச் சேவைகளும் அவசரத் தேவைகளுக்காக மட்டுமே இயக்கப்படுகின்றன.
மனிதாபிமான பாதிப்பு மாவட்டத்தில் இன்று காலை வரையான நிலவரப்படி, 257 குடும்பங்களைச் சேர்ந்த 850 பேர் இடம்பெயர்ந்துள்ளார்கள். இவர்களில் 235 பேர் 3 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 167 வீடுகளுக்குப் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

