ஊர்காவற்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை..!

ஊர்காவற்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை..!

சனாதிபதி செயலகத்தின்அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்துறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (21.11.2025) காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியது.

இவ் நடமாடும் சேவையில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்களின் பிரதிநிதி திரு. லக்ஷ்மன் அவர்களும் கலந்து கொண்டனர்.

இவ் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள்,
2025 ஆம் ஆண்டு முதலாவது வேலை நாளில் சேவை நாடிகளைச் நாடிச்சென்று சேவை வழங்குதல் என்று தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய இவ் நடமாடும் சேவையும் அதில் ஒரு அங்கம் என்றும், அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது சேவையை சரியாக ஆற்றும் போது பொதுமக்களுக்கான சேவைகள் வினைத்திறனாக பூர்த்தி செய்யக் கூடியதாக அமையும் என்றும், இவ் நடமாடும் சேவையை தாயர்ப்படுத்திய பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மேலும், இவ் நடமாடும் சேவையானது யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களில் நடைபெற்று வருவதாகவும் அதன் ஒரு அங்கமாக தீவுப்பகுதிகளில் நடாத்த தீர்மானிக்கப்பட்டதாகவும், இவ் நடமாடும் சேவையின் நோக்கம் மக்களை தேடிச்சென்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகும் என தெரிவித்தார். மேலும் இப் பிரதேசத்தில் நீர்முகாமைத்துவம் பெரும் சவாலாக காணப்படுவதாகவும், தாளையடி குடிநீர்த் திட்டத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டு தீவகம் முழுவதும் பொதுமக்களுக்கான நீர் விநியோகம் கிடைக்கும் எனவும், அமைச்சினுடைய நிதி ஒதுக்கீட்டில் குடிநீர் விநியோகத் திட்டதிற்கு இவ்வருடம் கணிசமான நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் , இவ்வருடம் ஏனைய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இலவச நீர் இணைப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடம் தீவுப்பகுதிக்கு இலவச நீர் வசதிகளை வழங்க வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு நிதி ஒதுக்கீட்டுனை வழங்கும் எனவும் தெரிவித்தார். மேலு‌ம், நீர் முகாமைத்துவம் தொடர்பாக முதலைக்கழிக்குளம், பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் மக்களின் சுய முயற்சியுடன் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இவ் நடமாடும் சேவையை நடாத்தும் போது மக்களின் பிரச்சினைகளை ஒரே இடத்தில் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்ததுடன், இப் பிரதேச செயலகத்தின் பல உத்தியோகத்தர்கள் யாழ் நகர்ப்பகுதிக்கு அப்பால் இருந்து தொடர்ச்சியாக பல வருடங்களாக அர்ப்பணிப்பான சேவையை ஆற்றி வருவதாகவும் அதற்காக தனது நன்றிகளையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், பல்வேறு உதவித்திட்டங்களை வழங்க பிரதேச செயலாளர் ஏற்பாடு மேற்கொண்டுள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ளும் சேவை நாடிகள் சரியான முறையில் பயன்படுத்துமாறும் தெரிவித்ததுடன் மக்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் தோளோடு தோள் நிற்கும் எனவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென தெரிவித்தார்.

இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ), சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.

மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும், இந் நிகழ்வில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான போசாக்கு உலர் உணவுப் பொதி வழங்கல், விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல், உலர் உணவுப் பொதி வழங்கல், தையல் இயந்திரம் வழங்கல், காசோலை வழங்கல், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம் வழங்கும் கற்றலுக்கான ஊக்குவிப்பு பணக் கொடுப்பனவு வழங்கல் ,காணி பூரண அளிப்பு வழங்கப்படவுள்ள பயனாளிகளின் விபரம், நீண்ட கால படுக்கையில் உள்ளவர்களுக்கான கட்டில், என்பன தெரிவு செய்யப்பட்ட தகுதியான பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டதுடன்
மூலிகைத்தோட்டம் திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும், இதுவரை திருமணப் பதிவு செய்யாதிருந்த தம்பதிகளுக்கு திருமண பதிவும் செய்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி வனஜா செல்வரெட்ணம் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin