கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்..!
நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.11.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இவ்வாண்டுக்கான காலாண்டு கூட்டமானது இது என்றும், மாவட்ட மாதாந்த , காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்தவ கூட்டமானது சீரான முறையில் நடைபெறுவதாகவும், கவனக்குறை காரணமாகவே சில தவறுகள் இடம் பெறுவதாகவும், நிதி நிர்வாக நடைமுறைகளை சரியான முறையில் கொண்டு செல்வதும் அதற்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதுமே இக்கூட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார். மேலும், தவறுகள் ஏற்பட்டால் அதற்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு திணைக்களத் தலைவரை சார்ந்தது எனவும், பிரதேச செயலக உள்ளக கணக்காய்வுச் செயற்பாடுகளை சரியான பொறிமுறையூடாக பின்பற்றுவதன் மூலம் தவறுகள் இடம்பெறாமல் தவிர்க்கலாம் எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கு பல மில்லியன் ரூபா ஒதுக்கீடுகள் கிடைக்கப்பட்டுவருவதாகவும், அண்மையில் கூட ரூபா 170.00 மில்லியன் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட அபிவிருத்திக்கு விரைவாக செயற்பட ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலம் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் திரு. பிரபாகரன், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் உள்ளகக் கணக்காய்வாளர் செல்வி என். பொன்ராணி ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. எஸ். ரமேஸ்குமார், பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், துறைசார் கிளைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


