சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விழிப்புணர்வு..!
சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று (10) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது ஜனாதிபதி செயலகத்தின் கிளீன் ஸ்ரீலங்கா செயலகம், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய உற்பத்தி திறன் செயலகம் ஆகியவற்றின் ஒன்றினைந்த திட்டமாகும்.
குறித்த நிகழ்வின் வளவாளராக திருகோணமலை மாவட்ட செயலக உற்பத்தி திறன் மாவட்ட உத்தியோகத்தர் ஏ.நுஸ்ரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய வகையில் தலா ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து கல்வி,பொருளாதாரம், சுகாதாரம்,உடல் நலம், சமூக நல்வாழ்வு, கலாசார ஆன்மீக அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய ஆறு முக்கிய கூறுகளை ஆராய்ந்து ஒவ்வொரு விடயங்களிலும் உள்ள சமூக பிரச்சினைகளுக்கு மூலோபாய தீர்வுகளை வழங்குதல் தொடர்பிலும் இங்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.
அன்றாட வாழ்வில் வீட்டுச் சூழல் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளின் போதான அறிவு திறன் மனப்பான்மை விருத்தியுடனான திறம்பட செயற்படக்கூடிய நல் எண்ணங்களை வளர்ப்பது பற்றியும் வளவாளரால் தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

