இறக்குமதி பெரிய வெங்காயம் குறித்து வௌியான தகவல்..!

இறக்குமதி பெரிய வெங்காயம் குறித்து வௌியான தகவல்..!

இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு சுமார் 2 இலட்சத்து 39 ஆயிரம் மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (04) அததெரணவுக்கு அளித்த பேட்டியில், உள்நாட்டுப் பெரிய வெங்காய அறுவடை தொடங்கிய ஓகஸ்ட் மாதம் முதல் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 50,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என சுங்கப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

 

இந்த நிலையில், அறுவடை செய்து சுமார் மூன்று மாதங்கள் ஆகியும், தமது விளைச்சலை விற்பனை செய்ய முடியாமல் உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் தற்போது கவலையான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

மேலும், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால், அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை உலர வைக்க முடியாமல், முழுமையாக அழிந்துவிட்டதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்தக் குழப்பத்திற்குத் தீர்வாக, லங்கா சதொச மூலம் ஒரு விவசாயியிடமிருந்து வாரத்திற்கு அதிகபட்சமாக 2,000 கிலோ கிராம் (2 மெட்ரிக் தொன்) பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இருப்பினும், இந்த நடைமுறைக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் காரணமாக, இவ்வாறு விற்பனை செய்வது சாத்தியமற்றது என்று விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Recommended For You

About the Author: admin