தமிழர்களுக்கு எதிராக கடும்போக்குவாதிகளின் சதி நடவடிக்கை..!

தமிழர்களுக்கு எதிராக கடும்போக்குவாதிகளின் சதி நடவடிக்கை..!

அம்பலப்படுத்தும் சிங்கள தேரர்

தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்ட வகையில் சிங்கள இனவாதிகள் செயல்படுவதாகப் பௌத்த தேரர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

மிஹிந்தலை பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதிக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்குமான நேற்றைய சந்திப்பின் போது மறைக்கப்பட்ட ரகசியம் ஒன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

அதற்கமைய குருந்தூர் மலையில் திட்டமிட்ட வகையில் பௌத்த மயமாக்கலை உருவாக்கி, அதனைத் தொல்பொருள் பகுதியாகப் பிரகடனம் செய்யும் நடவடிக்கை தொடர்பில் விகாராதிபதி உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான ஆவணத்தை தன்னிடம் வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

 

தொல்பொருள் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராக செயல்பட்ட ஜயதிலக்க என்னும் நபர் பௌத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட சின்னங்களை மூடைகளில் கொண்டுவந்து சுற்றியுள்ள நிலங்களிலும் வயல் நிலங்களில் வீசி அவற்றை தொல்பொருள் நிலங்களாக ஆவணப்படுத்தி தொல்பொருள் திணைக்களம் கையப்படுத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கடந்த காலங்களில் குருந்தூர் மலை தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. தமிழர்களுக்குச் சொந்தமான அந்தப் பகுதியைக் கைப்பற்ற தென்னிலங்கைக் கடும்போக்குவாதிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

 

ராஜபக்சர்கள் ஆட்சிக்காலத்தில் அரசியல்மயப்படுத்தப்பட்ட பிரச்சினையாகக் குருந்தூர் மலை விஸ்வரூபம் எடுத்திருந்தது.

 

இந்நிலையில் பௌத்த துறவி ஒருவரினால் அதன் பின்னாலுள்ள மர்மங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளமை தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin