பண்ணை பூங்கா மற்றும் கோட்டைப் பகுதிகளில் கலாசார சீரழிவான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் துரைராசா ஈசன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பொதுமக்கள், சிறுவர்கள் அதிகம் வந்து செல்லும் பண்ணை பூங்கா பகுதியில் பாலியல் ரீதியான செயற்பாட்டில் ஈடுபட்ட 40 வயது மதிக்கதக்க இருவர் யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் ஈசன் உள்ளிட்ட யாழ். மாநகர சபை உறுப்பினர் மற்றும் ஊழியர்கள் குழுவினருடன் தர்க்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, பொது இடத்தில் அநாகரிகமாகச் செயற்பட்ட ஆண், தனக்கு கொழும்பு பொலிஸில் ஆள் உள்ளதாகக் கூறி யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் ஈசன் அவர்களை மிரட்டும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் துரைராசா ஈசன் தெரிவிக்கையில்: யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் என்ற வகையில் தொடர்ச்சியாக எனக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவும், பொதுமக்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் அடிப்படையிலும் நேற்று யாழ். மாநகர சபையின் அதிரடி நடிவடிக்கையாக யாழ்ப்பாணம் கோட்டை, அதனை அண்டிய பகுதிகளான கடற்கரைப் பூங்கா அதாவது பண்ணைப் பூங்கா, ஆரியகுளம், புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம், யாழ்ப்பாணம் கோட்டையை அண்டியதாக வெளிப்புறத்திலுள்ள சுற்றுச்சூழல்கள், ரெலிக்கொம் சுற்றுப்புறச் சூழல்கள் எல்லாம் என் தலைமையில் கௌரவ உறுப்பினர்கள், மாநகர சபை பணியாளர்களும், சல்லடை போட்டு தேடினோம். இதன் பிரகாரம் பல பல சோடிகளாக பலர் இருப்பதை அவதானிக்க முடிந்தது. இதைவிட மதுபானங்கள் அருந்துதல் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுதல் என்பனவையும் அவதானிக்க முடிந்தது.
எம்மைக் கண்டவுடன் அவர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டனர். இருந்தபோம் அவர்கள் பாவித்த மதுபானங்களின் வெற்றுப்போத்தல்கள் உள்ளிட்ட சில பொருட்கள் எங்களால் அவதானிக்கப்பட்டு படங்கள், வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கோட்டையை அண்டிய பகுதிகளிலேயே இவ்வாறா சமூகச் சீரழிவான செயற்பாடுகளை எம்மால் அதிகளவில் அவதானிக்க முடிந்தது.
அத்தோடு, முனியப்பர் கோவிடியால் செல்கின்ற பாதை மற்றும் முனியப்பர் கோவிலுக்கு வடக்காக உள்ள பாதையிலும் இளைஞர்கள் அதிகளவில் கூடுவதையும், போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுதல் பெண்களைக் கூட்டிச்சென்று அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் எங்களால் அவதானிக்க முடிந்தது.
குறித்த பகுதிகளில் உள்ளாடைகள் இருந்ததைக் கூட எங்களால் அவதானிக்க முடிந்தது.
நேற்றுக் காலை 8. 30 மணியளவில் சுற்றுவளைப்பு நடவடிக்கையை ஆரம்பித்து பிற்பகல் 2. 30 மணிவரை அப்பணியை முன்னெடுத்திருந்தோம். இதன்போது, பாடசாலை மாணவர்களும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் எங்களால் அவதானிக்க முடிந்தது.
யாழ்ப்பாணத்திற்கு படிப்பதற்காக பெற்றோர் பிள்ளைகளை அனுப்பிவைக்கின்றனர். தூர இடங்களில் இருந்தும் பலர் யாழ்ப்பாணம் நகரத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்வி கற்க வருகின்றனர்.
எங்களை நம்பியே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை யாழ்ப்பாணம் நகரத்திற்கு அனுப்பிவைக்கின்றனர். அவர்களின் எதிர்காலத்திற்கு நாங்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தான். அந்த அடிப்படையிலேயே பாடசாலை மாணவிகள், மாணவர்கள் இவ்வாறான பாலியல் மற்றும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூகச் சீரழிவான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுக்க முற்பட்டோம்.
இதன்போது, பண்ணைப் பூங்கா பகுதியில் யாழ். மாநகர சபையால் அமைக்கப்பட்ட இருக்கையில் பொதுமக்கள், சிறுவர்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் இருவர் பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது, எம்மை அச்சுறுத்தும் வகையில் ஆணொருவர் செயற்பட்டார். தனக்கு கொழும்பு பொலிஸில் ஆள் இருப்பதாகவும், எம்மால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது எனவும் மிரட்டல் விடுத்தார்.
இவ்வாறான மிரட்டல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எமது கலாசாரம், பண்பாட்டைப் பாதுகாக்க நாம் இவ்வாறான தொடர் நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம். எனவே, யாழ்ப்பாணத்திற்கு கல்வி கற்க வரும் பாடசாலை சிறார்கள் குறிப்பாக பெண்பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் விழிப்பாக இருப்பதோடு, அவர்களின் செயற்பாடுகளைக் கண்காணித்து சமூகச் சீரழிவுகளைத் தடுத்து நிறுத்த யாழ். மாநகர சபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதி முதல்வர துரைராசா ஈசன் கோரிக்கை விடுத்துள்ளார்.