முதியோர் பராமரிப்புச் சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

முதியோர் பராமரிப்புச் சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் முதியோர்களுக்கான தேசிய செயலகம் இணைந்து முதியோர் பராமரிப்புச் சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி (06) மற்றும் (07) ஆம் திகதிகளில் உப்புவெளியில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்லத்திலுள்ள சுக நல நிலையத்தில் நடைபெற்றது.

 

இதன்போது பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

 

மிக விரைவாக வளர்ச்சியடையும் முதியோர் சனத்தொகையின் சவாலினை இன்று முழு உலகமும் முகங்கொடுத்துள்ள அதேநேரம், தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை விட இலங்கை வேகமாக முதியோர் சனத்தொகை அதிகரிப்பின் செயல்முறையில் நுழைந்து வருகிறது.

 

மறுபுறம், சமூகத்தின் சிக்கலான தன்மை மற்றும் கூட்டுக்குடும்பத்தின் சிதைவு ஆகியவற்றின் விளைவாக, முதியவர்கள் உறவினர்களின் பராமரிப்பை இழந்து முதியோர் இல்லங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

 

இதனடிப்படையில் முதியோர் இல்லங்களில் தங்கி வாழும் முதியோர் சமுதாயத்தினரைப் பாரமரித்தல் மற்றும் அவர்களின் உடலியல், சமூகவியல் மற்றும் உளவியல் தேவைகளை திருப்தியாக மிகவும் சிறந்த மற்றும் பயனுள்ள வாழ்க்கையினை அடைவதற்கு முதியோர் இல்லங்களில் பராமரிப்புச் சேவையினை வழங்கும் சகல உத்தியோகத்தர்களுக்கும் முதியோர் மற்றும் முதுமைப் பருவம் தொடர்பிலான முதியோர் பராமரிப்பு சேவை தொடர்பில் சிறந்த விழிப்புணர்வினை வழங்கும் பொருட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

குறித்த நிகழ்வில் வளவாளர்களாக வைத்தியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக நாளையும் (08) இந்நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதன்போது மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.எம் இர்பான், பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin