சுற்றுலாத்துறை மற்றும் செயல்பாட்டு பல்பணியாளர் பயிற்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு..!

சுற்றுலாத்துறை மற்றும் செயல்பாட்டு பல்பணியாளர் பயிற்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு..!

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அஸ்வெசும வேலைத்திட்டத்தின் கீழ் நன்மைபெறுகின்ற குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பான தொழிற்பயிற்சி வேலைத்திட்டதின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.10.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு . சி.டி. களுஆராட்சி, மற்றும் இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ தலைவர் திரு தீரா ஹட்டியாராச்சி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ பொதுநிர்வாக தலைவர் திரு வசந்த மைத்திரிபால ,சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள சந்தைப்படுத்தல் பணிப்பாளர் திரு.எம் யி.எஸ்.எஸ்.கீர்த்தி சிறி ,சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள சந்தைப்படுத்தல் உதவிப்பணிப்பாளர் திரு.சாகர குலசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் ,சர்வதேச அறிவுத்தடாகம் (International knowledge Pool) அமைப்பு ஆகியவை இணைந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருபதாயிரம் சுற்றுலாத்துறை வல்லுநர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இத்தொழிற்பயிற்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ்வாண்டு 5.8 மில்லியன் ரூபாய் தொழிற்பயிற்சி வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் , நாட்டில் இன்று அதிக வருமானத்தை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை காணப்படுவதாகவும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டமும் சுற்றுலாத்துறையில் வளர்ச்சியடைந்து வரும் மாவட்டமாக காணப்படுவதாகவும், சுற்றுலாத்துறை சார்ந்த முழுமையான விடயப்பரப்பை உள்ளடக்கிய அறிவை இந்த பயிற்சி வகுப்பினூடாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும் என தெரிவித்தார். மேலும் மாவட்டத்தில் இந்த பயிற்சியை பெற்றுக்கொள்கின்ற போது மாவட்ட மட்டத்தில் மட்டுமில்லாமல் எமது சர்வதேச ரீதியாகவும் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளக்கூடியதான வளமான எதிர்காலம் கிடைக்கும் என்றும், இந்த அரிய சந்தர்ப்பத்தை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இவ் அஸ்வெஸ்ம திட்டத்தில் பயனாளிகளாக உள்வாங்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பங்களையும் மேலும் வலுப்படுத்தும் திட்டமாக அமையவுள்ளதாகவும் தங்கி வாழும் மனநிலையில் இருந்து வெளிவரக்கூடிய சந்தர்ப்பமாக இது அமையும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் இப் பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அவர்களுக்குரிய பயிற்சி கட்டணமான ஒருவருக்கு ரூ. 55,835 தொகையை சமுர்த்தி திணைக்களத்தினால் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததார். மேலும் சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் துறை யாழ்ப்பாண மாவட்டத்திலும் வளர்ச்சி பெற்று வருவதாகவும் எதிர்காலத்தில் இதற்கான கேள்விகள் அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்ததார். அரச வேலைவாய்ப்பு தான் வேண்டும் என்ற மனநிலையில் இருந்து மீண்டு வாழ்க்கை முறையையை மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் இந்த கல்விக்கு மேலாக துறைசாந்த கல்வியை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் இத் துறையில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் உங்கள் செயற்பாடுகள் அமைய வேண்டுமெனவும் இதில் முக்கியமாக அறிவு, திறன் மனப்பாங்கு போன்ற மூன்று விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டதுடன் இவ்வாறான பயற்சி நெறிகள் ஊடாக அறிவை பெற்றுக்கொள்ள முடிவதுடன், இதற்கு மேலதிகமாக திறன் வளர்த்துக்கொள்ளவும் இவை சந்தர்ப்பமாக அமையுமென்றும் எமது மக்களைப் பொறுத்தவரையில் மனப்பாங்கில் மாற்றம் ஏற்படுத்துவதனூடாக வாடிக்கையாளர் திருப்தியை ஏற்படுத்த முடியுமெனவும்,தெரிவித்தார்.

மேலும் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக நிறுவன வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டுமெனவும் இதனூடாக நிறுவன நன்மதிப்பை அதிகரிக்கும் பொறுப்பு உள்ளதாகவும் இதற்கு மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தல் வேண்டும் என்றும் குறிப்பிட்டதுடன், பயிற்சி நெறிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும்

இதற்கு மேலாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பதில் கடமைக்குரிய கொடுப்பனவு கிடைக்கவில்லை என கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்ததாகவும், அதில் கொடுப்பனவு வழங்கப்படாவிடின் தாம் அவ்வாறான பதில் கடமைகளை மேற்கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அவர்களிடம் கோரிக்கை முன்வைத்த போது அவர் அதனை சாதகமாக பரிசீலித்து கொடுப்பனவை மேற்கொள்ள உடன்பட்டமைக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.அத்துடன்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான

வெற்றிடங்கள் காணப்படுவதனால் அவர்கள் நீண்டகாலம் பதில் கடமைகளை தமது பணிச்சுமைக்கு மேலதிகமாக கடமையாற்றுகின்றமை குறித்து தெரிவித்த போது அதனை சாதகமாக பரிசீலிப்பதாக தெரிவித்தமைக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு . சி.டி. களுஆராட்சி அவர்கள் இத்தொழிற்பயிற்சி திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட முழுமையான ஒத்துழைப்பு வழங்கியமைக்காக மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு தமது நன்றிகளை தெரிவித்தார்.

 

தொடர்ந்து புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மேலும் குறித்த பயிற்சி நெறிக்கான பங்குதாரர் ஒப்பந்தத்தில் இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ தலைவர், சர்வதேச அறிவுத்தடாகம் (International knowledge Pool) தலைவர் ஆகியோர் கையொப்பமிடும் நிகழ்வும் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன் ,மாவட்ட சமுர்த்தி கணக்காளர் திரு. முருகதாஸ் , மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் திரு . எஸ். கபிலன்,

பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் .

Recommended For You

About the Author: admin