மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் கோவிற்குடியிருப்பு கடற்கரை வீதி புனரமைப்பு..!
கோவிற்குடியிருப்பு கடல் வட்டாரத்தின் கடற்கரை வீதி மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி ஒதுக்கீடான 5மில்லியன் ரூபாய் செலவில் தார் வீதியாக புனரமைக்கப்பட்டு வருவதாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் திருமதி பவுலினா சுபோதினி தயாளராசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
மேற்படி கடற்கரை வீதியானது சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்டு 2.5 கிலோமீட்டர் நீளமானதாகவும் தொடர்ந்து சாவகச்சேரி பிரதேசசபை எல்லைக்குட்பட்டு கச்சாய் துறைமுகம் வரை நீண்டு செல்கின்றது.
இருப்பினும் தற்போது இவ்வீதியானது நகரசபை எல்லைக்குட்பட்டு 600மீற்றர் நீளம் வரையே தார் வீதியாக புனரமைக்கப்படுகின்றது.
இவ்வீதியை முழுமையாக கச்சாய் துறைமுகம் வரை புனரமைக்கும் பட்சத்தில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பயனடைய முடியும்.
அதனூடாக கிராமிய பொருளாதாரத்தையும் மேம்படுத்த இயலும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

