முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த திருகோணமலை மாவட்ட பொது ஆலோசனை கேட்டல் கலந்துரையாடல்..!
இலங்கை மின்சார சபையால் 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்காக முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவு மற்றும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற பொது ஆலோசனை கேட்டல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (18) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
2002 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 17 (c) இன் கீழ் நடைபெறும் இந்தப் பொது ஆலோசனை கேட்டலின் திருகோணமலை மாவட்ட அமர்வு இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மின்சார நுகர்வோர் மற்றும் கைத்தொழில் சார் பிரதிநிதிகள் உட்பட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்று இதில் தமது கருத்துக்களை பரிமாறியிருந்தனர்.
இதன்போது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால், பணிப்பாளர் நாயகம் தம்மித்த குமாரசிங்க, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் , பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி. நதீஜா வாரபிடிய, பிரதி பணிப்பாளர் நாயகம் நிலந்த சபுமானகே (செயல்பாடுகள்), உதவி பணிப்பாளர் ஜயசூரியன் ( பெரு நிறுவனத் தொடர்பாடல்கள்), திணைக்கள தலைவர்கள், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

