பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம்: மீனவர்கள் எதிர்ப்பு, இந்தியாவின் நிதி உதவியுடன் திட்டம் மீண்டும் ஆரம்பம்
பருத்தித்துறை மீனவர்களின் நலன்புரிச் சங்கப் பிரதிநிதிகள், பருத்தித்துறை நகர சபை தலைவர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரை சந்தித்து முன்மொழியப்பட்ட துறைமுக அபிவிருத்தி திட்டம் குறித்த தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியதுடன், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எடுத்துக்காட்டி மகஜரையும் கையளித்தனர்.
பருத்தித்துறை மீனவர் நலன்புரி சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் நேற்று யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக மையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தினர்.
2018 ஆம் ஆண்டில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இதேபோன்ற அபிவிருத்தி முயற்சி, மீனவர் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பருத்தித்துறை பகுதியில் உள்ள பல முன்னணி பாடசாலைகளின் கடும் எதிர்ப்பிற்குப் பிறகு கைவிடப்பட்டது. அப்போதைய நிலையில், உள்ளூர் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஒருபோதும் அமுல்படுத்த மாட்டோம் என ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.
இருப்பினும், முன்னதாக நிராகரிக்கப்பட்ட போதிலும், இந்திய அரசாங்கம் இப்போது இந்த திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிப்பதாக மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். மேலும், உள்ளூர் மீனவ சமூகங்கள் அல்லது சமூக அமைப்புகளுடன் எந்தவொரு ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும், அபிவிருத்திக்கான கள ஆய்வுகள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஒருதலைப்பட்சமாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
“இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் எங்கள் கிராமத்தின் இருப்பை அச்சுறுத்துவதோடு, உள்ளூர் மக்களுக்கு கடுமையான தீங்கை விளைவிக்கும் என்பதால் நாங்கள் இதை கடுமையாக எதிர்க்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.

