கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூபா 21 கோடி தங்கக் கடத்தல் முறியடிப்பு; ஊழியர் கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுமார் ரூபா 210.5 மில்லியன் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற 54 வயதுடைய விமான நிலைய ஊழியர் ஒருவர் இன்று காலை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 6.50 மணியளவில் விமான நிலைய ஊழியர்கள் வெளியேறும் வாயிலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான பாதுகாப்பு சோதனையின்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் தனது காலுறைகளுக்குள் 5.941 கிலோகிராம் எடையுள்ள 51 தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்து கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 24 கரட் கொண்டது என்றும், அதன் மதிப்பு ரூபா 210,524,575.35 என்றும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

