அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்…!
அமைச்சின் உயர் அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா த்துறை அமைச்சு – வெளிநாட்டு வேலைவாய்ப்பின் கீழ் வடமாகாணத்தின் மாவட்டங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (12.09.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இன்றைய கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன், வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் குடும்பங்களையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களின் குடும்பங்களையும், வெளிநாடுகளில் உள்ளவர்களினதும் நலன்களை பேணுவதும் மற்றும் வழிப்படுத்த வேண்டிய பொறுப்பும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், தற்போது இந்தியாவிலிருந்து மீளத் திரும்பிய குடும்பங்களின் ஒளிமயமான எதிர்காலம் நோக்கியும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்து, எமது நாட்டின் அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வினைத்திறனாக செயற்பட்டு தமது பங்களிப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் அமைச்சின் நோக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி) கலாநிதி எம். எம். எஸ். என். யாலேகம அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பு தொடர்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் (நிர்வாகம்) திரு. ஜெ. எஸ். பிரசாத் பியசேன அவர்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் திரு. ஏ. கே. யு. ரோஷன அவர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தார்கள். மேலும் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) திருமதி கே. ஏ. எஸ். ஹேமகாந்தி அவர்களும், சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. கே. நிகரில்காந் அவர்களும் அமைச்சினால் முன்னேடுக்கப்படவுள்ள திட்டங்களை முன்வைத்தார் கள்.
மேலும், இக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கனகேஸ்வரன் அவர்களாலும், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. சி. ஜெயக்காந் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி பி. அஜிதா ஆகியோர் தத் தமது மாவட்டங்களின் நிலவரங்களை முன்வைத்தார்கள்.
இக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் கெளரவ அருண் ஹேமச்சந்திர அவர்கள் இணைய நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலம் கலந்து கொண்டு உரையாற்றுகையில், தாம் தவிர்க்கமுடியாத காரணத்தினால் தான் நேரடியாக பங்குபற்ற முடியவில்லைஎனவும், தமது அமைச்சினால் இக் கலந்துரையாடலானது களுத்துறை, காலி மாவட்டங்களில் ஆரம்பித்து வெற்றியடைந்துள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்றுவருவதாகவும், எமது நாட்டிற்கு அதிக அந்நியச் செலாவணியினை ஈட்டித் தருவதாகவும், அந்தவகையில் ஆண்டுக்கு சுமார் 03 இலட்சம் வரையானவர்கள் செல்வதாகவும் தெரிவித்தார். மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைமையினை சரியான முறையில் கட்டமைக்க வேண்டிய தேவையுள்ளதாகவும், பதிவு செய்த குடும்பங்களின் நலன்களில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது எனவும், அதேவேளை நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் பதிவு செய்யாது சென்றவர்களின் குடும்பங்களின் நலன்களிலும் கரிசனை செய்ய வேண்டிய பொறுப்பும் எமக்குள்ளதாகவும் கெளரவ பிரதி அமைச்சர் தெரிவித்தார். மேலும், மக்களை பிழையாக வழிநடத்தி மோசடி செய்யும் பதிவு செய்யாத வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பொருளாதார நெருக்கடி சமூக நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வு கண்டுவருவதாகவும் தெரிவித்து, வேலைவாய்ப்பு தொடர்பாக எடுக்கப்படும் உயர்மட்டத் தீர்மானங்கள் கீழ் மட்டம் வரை சென்றடைய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கெளரவ பிரதி அமைச்சர் தெரிவித்து, குடிமக்களின் தேவைகளை தட்டிக்கழிக்காமல் சேவையினை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், அமைச்சின் பிரதம கணக்காளர் திரு. சி. பி. ஹலபதி, சிரேஷ்ட உதவிச் செயலாளர் செல்வி வசந்தகுமாரி, யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு. ரி. டி. ஜீ. பிராங்கிளின், வடமாகாணத்தின் மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


