மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்..!
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான “மாணவத் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று (03.09.2025) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியை வழங்கும் நோக்கில் திருகோணமலை மாவட்ட செயலகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கல்வி அமைச்சும் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களின் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சேவைகளைப் எவ்வாறு பெற்றுக்கொள்ளல், மாணவர் தலைவர்கள் தமக்கான தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக்கொள்ளும் விதம், பாடசாலைகளின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இதன்போது மாணவர்களின் மத்தியில் தெளிவூட்டப்பட்டது.
இந்த நிகழ்வு சிறுவர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உயர்த்தி, மாணவர்களை செயற்பாட்டாளர்களாக உருவாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. மேலும் இதன்போது மாணவர் தலைவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தலைப்புகளின் அடிப்படையில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


