நேற்று (26) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர இருதய சத்திரசிகிச்சை தேவை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்சான் பெல்லன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் இதயக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது அவரது இதயத்தை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக டொக்டர் பெல்லன கூறினார்.
தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்ற போதிலும், நீண்ட காத்திருப்புப் பட்டியல் காரணமாக, விக்ரமசிங்க தனது சொந்தச் செலவில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று விரைவாக சத்திரசிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்றும் டொக்டர் பெல்லன குறிப்பிட்டார்.
அவரது அலுவலகத்தின்படி, விக்ரமசிங்க எதிர்வரும் நாட்களில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவார்.
தனது சிகிச்சை நிறைவடைந்த பின்னர், அனைத்து அரசியல் கட்சிகளையும் கலந்துரையாடலுக்கு அழைக்க அவர் உத்தேசித்துள்ளார்.
‘அரசியலமைப்புக்கு விரோதமான சர்வாதிகாரத்தை’ முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சி என்று அவர் கூறியதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

