அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கான விசேட வர்த்தகப் பொருள் வரி (Special Commodity Levy) அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இந்த வரித் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான விசேட வர்த்தகப் பொருள் வரி 60 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கான விசேட வர்த்தகப் பொருள் வரி 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக, அதாவது 40 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரித் திருத்தம் நேற்றைய தினத்திலிருந்து மூன்று மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூர் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் தமது அறுவடைக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.

