பூமணி அம்மா அறக்கட்டளையால் அரியாலையில் 500 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி

யாழ். அரியாலை பகுதியில் குடிநீர் வசதியின்றி நீண்ட காலமாக கஷ்டப்பட்டு வந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் பெறுவதற்காக குழாய்க்கிணறு வசதி ஏற்படுத்தித் தருமாறு அரியாலை ஜே/96,97 கிராம சேவையாளர் பிரிவவுகளை உள்ளடக்கிய கலைவாணி சனசமூக நிலையத்தின் செயலாளர் த.பிரவீன் அவர்கள் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வடமாகாண சபையின் யாழ், மாவட்ட உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த விடயத்தினை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்,தீவகம் வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, இரண்டு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரம் (265000.00) ரூபா செலவில் அரியாலை கலைவாணி சனசமூக நிலையத்திற்கு சொந்தமான  சின்னாலங்கண்டு வீதியில் உள்ள காணியில் அறக்கட்டளையால் குழாய்க்கிணறு வசதி ஏற்படுத்தி,குடி நீர்த்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த பகுதியில் உள்ள பொன்னம்பலம் வீதி,சின்னாலங்கண்டு வீதி,முள்ளி வீதி,கலைவாணி வீதி,கேணியடி வீதி,A9 வீதி வீதி,குகன் வீதி,நெடுங்குளம் வீதி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள்,குடிநீர் பெறுவதற்காக இக் குடிநீர்த் திட்டத்தினை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் விசுவாசம் செல்வராசா அவர்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து,பெயர்ப் பலகையினை திரை நீக்கம் செய்து மக்கள் பாவனைக்காக கலைவாணி சனசமூக நிலைய நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.

குறித்த குடிநீர்த் திட்டத்துக்கான நிதிப் பங்களிப்பினை கனடா ரொறண்டோவைச் சேர்ந்த பூமணி அம்மா அறக்கட்டளையின் தீவிர செயற்ப்பாட்டாளரும்(ITR) வானொலி சேவையின் தீவிர அபிமானியுமான  திரு,திருமதி மோகனதாஸ் சாந்தகுமாரி தம்பதியினரின் முப்பத்தியொராம் ஆண்டு திருமண நன்நாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் இத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது.

கலைவாணி சனசமூக நிலையத் தலைவர் ஜெ.தருமராஜா தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் கலைவாணி முன்பள்ளி சிறார்களுக்கான கலை நிகழ்வுகளும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றதோடு பெற்றோருக்கான கலை நிகழ்வுடன் பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றன.இந் நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம்,இணைப்பாளர்,T.ஜோசேப் சனசமூக நிலையத்தின் செயலாளர் த.பிரவீன்,பொருளாளர் இ.சுந்தரகுமார் உட்பட பல பொது மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: webeditor