கிளிநொச்சியில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாகனம் விபத்து
வட மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ வாகனம் நேற்று (ஆகஸ்ட் 1) கிளிநொச்சியில் மாடுகளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
பரந்தன்-முல்லை வீதியில், கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 2ஆம் மைல்கல் அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திடீரென வீதியை மறித்து மாடுகள் குறுக்கே சென்றதால், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாகனம் மாடுகள் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான புதிய அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கோ அல்லது அவருடன் பயணித்த பணியாளர்களுக்கோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

