இலங்கையின் புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் நியமனம்: வெள்ளை மாளிகை அறிவிப்பு
இலங்கைக்கு அடுத்த அமெரிக்காவின் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக, கலிபோர்னியாவைச் சேர்ந்த அனுபவமிக்க இராஜதந்திரி எரிக் மேயரை நியமிப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மேயரின் பெயரை உறுதிப்படுத்தலுக்காக அமெரிக்க செனட் சபைக்கு உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்துள்ளார்.
மேயர் சிரேஷ்ட வெளிநாட்டு சேவையின் முக்கிய உறுப்பினர் ஆவார். தற்போது அவர் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவின் சிரேஷ்ட பணியக அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இந்தப் பதவியில், அவர் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட பிராந்தியம் முழுவதுமான அமெரிக்க கொள்கை முன்னுரிமைகளை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைக்கிறார்.
அவரது விரிவான இராஜதந்திர அனுபவங்களில், நோர்வேயிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதுவராகவும் (Chargé d’Affaires, a.i.) மற்றும் வடக்கு மாசிடோனியாவின் ஸ்கோப்ஜேயில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதுவராகவும் மற்றும் துணை தூதரக தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியது அடங்கும். முன்னதாக, கஜகஸ்தானின் அல்மாட்டியில் அமெரிக்க துணைத் தூதுவராகவும் பணியாற்றினார். அங்கு அவர் பல நிறுவன நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியதுடன், மத்திய ஆசியாவில் உள்ள ஒரே அமெரிக்க துணைத் தூதரகத்தின் இருப்பிடமான தெற்கு கஜகஸ்தானில் அமெரிக்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
வாஷிங்டனில், மேயர் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவில் சிறப்பு உதவியாளர் மற்றும் சிரேஷ்ட ஆலோசகர் போன்ற முக்கியப் பதவிகளையும் வகித்துள்ளார். இது பிராந்தியக் கொள்கை ஒருங்கிணைப்பில் அவரது நிபுணத்துவத்தை மேலும் வெளிப்படுத்துகிறது.

