உலகில் புற்றுநோய், காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களைவிட இதய நோய் பாதிப்பால் ஏற்படும் மரணங்கள்தான் அதிகம். இதய நோய்களால் சராசரியாக ஆண்டுக்கு 1.70 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இது அடுத்த 10 ஆண்டுகளில் 2.30 கோடியாக உயரும் என்கின்றன மருத்துவ ஆய்வு முடிவுகள்.
புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவு, உடல் உழைப்பின்மை போன்றவற்றைத் தவிர்த்தாலே இதயக் கோளாறுகளால் ஏற்படும் 80 சதவீத மரணங்களைத் தவிர்க்க முடியும் என்கிறது உலக இதயக் கூட்டமைப்பு. ரத்தக் கட்டிகள் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதமும் ஏற்படலாம். அதேபோல் காலில் ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு, அந்தக் கட்டிகள் உடைந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்.
இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும். இதயத் தசைகளின் ‘பம்பிங்’ திறன் குறைவு, சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படவும் சாத்தியம் உண்டு. இதய நோய் ஏற்படாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், நல்ல எண்ணம், நல்ல சுற்றுச்சூழல் ஆகியவை முக்கியமாகும். நம் உடல் உறுப்புகளில் முக்கியமானது இதயம். மூளைச்சாவு அடைந்தவர்களுக்குக் கூட இதயம் வேலை செய்து கொண்டிருக்கும்.
எனவே, இந்த இதயத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் தலையாய கடமை. தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். தற்போதைய உணவு உள்ளிட்ட பல்வேறு பழக்கவழக்கத்தால் 15 வயது முதலே மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனம் செய்தால் மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.
இடது கை, தோள் பட்டையில் வலி ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். எண்ணெய் உணவுகள், அசைவ உணவுகளை தவிர்த்தல் நல்லது. 19 வயது நபருக்கு கூட பைபாஸ் சர்ஜரி செய்யும் நிலை உள்ளது. உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோய்களை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று இதய நிபுணர்கள் கூறுகின்றனர். இதயம் இதமாக இருக்க 10 கட்டளைகள்
1. உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
2. வெள்ளைச் சர்க்கரையைத் தவிருங்கள்.
3. கொழுப்புச் சத்து மிகுந்த உணவைத் தவிருங்கள்.
4. புகைப் பழக்கத்தை கைவிடுங்கள்.
5. மது அருந்தாமல் இருங்கள்.
6. மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
7. உடல் பருமனைக் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.
8. குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. தினசரி 1 மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. மனித நேயத்துடன் செயல்படுங்கள்.
இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் இதயத்தை இதமாக வைத்துக்கொள்ள முடியும் என்று இதய நிபுணர்கள் கூறுகின்றனர்.