மக்களின் துன்பங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்..!
நகர சபை உறுப்பினர் கு.பிரணவராசா
சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணி குளத்தினை வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது இதனால் பல நூற்றுக்கணக்கான மக்கள் வருடா வருடம் பாதிக்கப்படுகின்றனர் என சாவகச்சேரி நகரசபையின் கோவிற்குடியிருப்பு வட்டார உறுப்பினர் கு.பிரணவராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
பல ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட உப்புக் கேணிக் குளத்திற்கான வடிகான்களை அழித்து கடந்த காலங்களில் அபிவிருத்திகள் மற்றும் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதனால் குளத்தின் மேலதிக நீர் கடலைச் சென்றடைய முடியாமல் குடிமனைகளுக்குள் தேங்கி பாரிய அழிவுகளை ஏற்படுத்துகின்றது.
இந்நிலையில் தற்போது எவருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மாற்று வழி ஒன்றின் ஊடாக மேலதிக நீரைக் கடத்த நகரசபை எதிர்பார்த்துள்ளது.அதனை நடைமுறைப்படுத்த அண்ணளவாக 45மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகிறது.
இருப்பினும் மக்களின் கோரிக்கையை ஏற்று நகரசபையின் முன்னைய செயலாளர் சீராளன் 2025ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 7மில்லியன் ரூபாவை மாத்திரமே ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த நிதி போதுமானதாக இல்லாமையால் புலம்பெயர் உறவுகளுடைய ஒத்துழைப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஆகியவற்றையும் குளத்திற்கான வடிகால் அமைக்க எதிர்பார்க்கின்றோம்.
எனவே உப்புக்கேணிக் குள அபிவிருத்தி விவகாரத்தில் அரசியலைக் கைவிட்டு மக்களுடைய அவல நிலையை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.இதற்கு தீர்வு காணும் பட்சத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு விடிவு கிடைக்கும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

