செம்மணி மனிதப் புதைகுழி : தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் அகழ்வை தொடரவும் தீர்மானம்
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை (19-01-2026) நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஏற்கனவே இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழ்வுப் பணிகளில் இதுவரை 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 239 எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
: புதைகுழிக்குள் அதிகளவில் மழைநீர் தேங்கி நிற்பதால், அகழ்வுப் பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எதிா்வரும் பெப்ரவரி 09 ஆம் திகதி தேங்கியுள்ள நீரை முழுமையாக வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், அன்றைய தினமே அடுத்தகட்ட அகழ்வுப் பணிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்குழு: நீதவான் எஸ். லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகள் நிரஞ்சன் மற்றும் ஞா. ரஜித்தா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கள ஆய்வில் பங்கேற்றனர்.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள எச்சங்களைச் சேதமின்றி மீட்கத் தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


