தடுத்து வைக்கப்பட்டுள்ள நரம்பியல் நிபுணரின் மகள் கைது

தடுத்து வைக்கப்பட்டுள்ள நரம்பியல் நிபுணரின் மகள் கைது: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விசேட நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி விஜேரத்னவின் மகள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த வாரம், விசேட நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணரின் 21 வயது மகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கமைய, இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், நரம்பியல் நிபுணரின் மகளைக் கைது செய்தனர்.

 

டாக்டர் மகேஷி விஜேரத்ன, தான் தொடர்புபட்ட ஒரு தனியார் நிறுவனம் மூலம் ரூ. 50,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை நோயாளிகளுக்கு ரூ. 175,000 இற்கு விற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

இதனால் நோயாளிகளுக்கு ரூ. 300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, உத்தியோகபூர்வ வைத்தியசாலை நடைமுறைகள் மூலம் சத்திரசிகிச்சை பொருட்களை கொள்வனவு செய்யாமல், பொது சேவை கொள்முதல் விதிகளை டாக்டர் மீறியதாகத் தெரிவித்துள்ளது. மாறாக, சுமார் 300 நோயாளிகளுக்கு தனது தனியார் நிறுவனம் மூலம் பொருட்கள் விற்கப்பட்டுள்ளன.

டாக்டர் மகேஷி விஜேரத்ன, பல நாட்களாக மூளைச் செயலிழப்பு என அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார் என்பதும் அண்மையில் தெரியவந்தது.

Recommended For You

About the Author: admin