தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டிக்கு விண்ணப்பித்தல் தொடர்பில் அரச துறை நிறுவனங்களுக்கு திசை முகப்படுத்தல் நிகழ்ச்சி!
நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அளவிடல் மற்றும் அங்கீகரித்து தொடர்ச்சியாக மேம்படுத்தும் எதிர்பார்ப்புடன் இம்முறையும் ‘உற்பத்தி திறன் மூலம் ஒரு வளமான நாடு’ எனும் தொனிப் பொருளில் தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டி இடம்பெறவுள்ளது.
இதற்கமைய எமது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசநிறுவனங்கள், பாடசாலைகள் மேற்படி
போட்டியில் பங்குபற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களைப்
பூர்த்திசெய்தல், நிறுவனங்களைத் தயார்படுத்தலுக்கான வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனையினை
மாவட்ட செயலாளர் தலைமையிலான மாவட்ட செயலக உற்பத்தித்திறன் மேம்பாட்டுப் பிரிவினர்
மேற்கொண்டுவருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாக விருதுக்கு விண்ணப்பித்தல் மற்றும் தயார்படுத்தல் தொடர்பில் அரச பிரிவில்
பங்குபற்றவுள்ள மாவட்டத்தின் அனைத்து அரச திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள்,
சபைகளுக்குத் தெளிவுபடுத்தும் திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சியொன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன்
தலைமையில் இன்று(24) பி.ப 2.30மணி தொடக்கம் 4 .00மணி வரை
மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட செயலாளர் அவர்கள் குறித்த போட்டிக்கு மாவட்டத்தின் அனைத்து அரச துறை நிறுவனங்களும் விண்ணப்பிப்பதன் மூலம் நிறுவனத்தின் சேவையினையும் செயலாற்றுகையையும் மேலும் வினைத்திறனுடையதாக்கிக் கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டி தொடர்பிலும் அரசதுறையில் பின்பற்றப்படும் மதிப்பீட்டு அளவுகோல்கள், மதிப்பெண் வழங்கப்படும் முறைகள் மற்றும் மதிப்பீட்டின் போது கருத்தில் கொள்ளப்படும் விடயப்பரப்புகள் தொடர்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டதோடு அவற்றை எவ்வாறு பிரயோக ரீதியில் செயல் படுத்துவது என்பது தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.
மேலும் மாவட்ட செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்யோகத்தரால் போட்டி விதிமுறைகள் மற்றும் போட்டிக்கான பதிவுகளை மேற்கொள்ளல் மற்றும் மதிப்பீட்டு செயல்முறை தொடர்பில் தெளிவான விளக்கம் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய திணைக்களத் தலைவர்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


