யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்..!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்..!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்ட திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (24.06.2025) காலை 10.40 மணிக்கு மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்களின் பாரியார் திருமதி ரஜனி பிரதீபன் மற்றும் பிள்ளைகள் அழைப்பின் பேரில் பங்குபற்றியிருந்தார்கள்.

சர்வ மதகுருமார்களின் ஆசியுடன் வரவேற்பு நிகழ்வானது ஆரம்பமாகியது.

இவ் வரவேற்பு நிகழ்விற்கு தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த திரு பிரதீபன் அவர்கள் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், தாமும் அவரும் ஒரே சமயத்தில் இலங்கை நிர்வாக சேவைக்கு இணைந்ததாகவும், அவர் உதவித் திட்டப்பணிப்பாளராகவும், திட்டப்பணிப்பாளராகவும், பிரதேச செயலாளராகவும், மேலதிக அரசாங்க அதிபராகவும் பின்னர் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபராக ஒரு வருடத்திற்கு மேலாக கடமையாற்றியவர் எனவும் தெரிவித்தார். மேலும் அரசாங்க அதிபர் தமக்கான பதவியேற்பு நிகழ்வினை மிகவும் எளிமையாக மேற்கொள்ளுமாறு கூறினாலும் எமது பாரம்பரிய முறையில் வரவேற்புச் செய்வது எமது கடமை என்றும் அந்த வகையில் இந் நிகழ்விற்கு தலைமை தாங்குவதில் தாம் மகிழ்வடைவதாக தெரிவித்து, அவர் மக்களுக்கான சிறப்பான சேவையாற்றுவதுடன் மேன்மேலும் பதவி உயர்வுகள் பெற்று உயர்வடைய தமது வாழ்த்துக்களை மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துக்கொண்டார்.

இந் நிகழ்வில் வரவேற்புரை பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. மேலும், வாழ்த்துரைகள் திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், பிரதம உள்ளகக் கணக்காளர் திரு எஸ். ரமேஷ்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவருமான திரு. ம. வித்தியானந்தநேசன், பிரதி பதிவாளர் நாயகம் திரு ப. பிரபாகர், கணக்காளர் திரு. அ. நிர்மல், நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆ. சத்தியமூர்த்தி, சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாஷினி மதியழகன், உத்தியோகத்தர்களான திருமதி ரேவதி பாலேந்திரன் மற்றும் திருமதி சிவராணி ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபராக பொறுப்பேற்ற திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமது ஏற்புரையில், தெரிவித்தாவது, யாழ்ப்பாணமாவட்டச் செயலகத்தில் ஏழு அரசாங்க அதிபர்களுடனும், முல்லைத்தீவு உள்ளடங்கலாக 08 அரசாங்க அதிபர்களுடன் பணியாற்றும் பாக்கியம் கிடைத்ததாகவும் தெரிவித்தார். மேலும், அருட்தந்தை அவர்களின் ஆசியுரையில், கடந்த 13 மாதங்களாக அரசாங்க அதிபர் என்ற வெற்றிடமே காணப்படாத வகையில் பதில் அரசாங்க அதிபர் கடமையாற்றி இருந்ததாக குறிப்பிட்டதை அரசாங்க அதிபர் குறிப்பிட்டு அதற்கு எனது பணிக்கு மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பான சேவையினை வழங்கியமையே காரணம் எனக் குறிப்பிட்டார். மேலும், முன்னாள் அரசாங்க அதிபர் அமரர் க. கணேஷ் அவர்கள் “அரசாங்க சேவை என்பது கடவுளால் தரப்பட்ட வரம் – அதனை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் ” எனக் கூறுவதனை ஞாபகப்படுத்தி நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட அபிவிருத்திக்கு வினைத்திறனாக செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வின் இறுதியில் பழைய பூங்கா வளாகத்தில் அரசாங்க அதிபரினால் மரக்கன்று நாட்டிவைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin