ஜேவிபி மண்டைதீவு புதைகுழியை வதந்தி என கடந்து போக முயற்சிக்கின்றது..!

பட்டலந்த படுகொலைகள் குறித்து விரிவாக பேசும் ஜேவிபி மண்டைதீவு புதைகுழியை வதந்தி என கடந்து போக முயற்சிக்கின்றது..!

மண்டைதீவு புதைகுழிகளை வதந்தி என ஜேவிபி நீதி அமைச்சர் ஹர்ஷனா நாணயக்கார பாராளமன்றத்தில் இன்று தெரிவித்து இருக்கின்றார்.

23.08.1990 அன்று , இராணுவம் மண்டைதீவு, அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை ஆலயங்களின் தஞ்சமடைய உத்தரவிட்டிருந்தது.

இராணுவத்தினரின் உத்தவுக்கமைய பொதுமக்கள் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பாடசாலைகளில் தஞ்சமடைந்திருந்தனர்.

இவ்வாறு தஞ்சமடைய தவறிய சுமார் 20 பொதுமக்களை சுட்டு கொன்ற இராணுவம் அல்லைப்பிட்டி பிலிப் நேரியின் தேவாலயத்தில் (PhilipNeri’s Church) தஞ்சமடைந்திருந்த 15 முதல் 45 வயதுக்குட்பட்ட 500 இளைஞர்களை கயிறுகளால் பிணைத்து பிடித்து சென்றனர் .

ஆனால் பிடித்து செல்லப்பட்டபட்டவர்களை படிப்படியாக விடுவித்த இராணுவத்தினர் வெறும் சில நாட்களில் அதிகாலை பொழுதொன்றில் ஈபிடிபி சகிதம் வந்து மண்கும்பான் பாடசாலையிலும் அங்குள்ள பிள்ளையார் கோயிலிலும் மக்களை தஞ்சமடைய உத்தரவிட்டார்கள்

இதை தொடர்ந்து வீடுகளுக்குள் நுழைந்த ஆயுதமேந்திய ஈபிடிபி மற்றும் இராணுவத்தினர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்களின் தலையில் அடித்து, அவர்களை இழுத்து சென்றார்கள்

பெண்கள் தங்கள் குழந்தைகளை ஆண்களின் கைகளில் திணித்து அவர்களை காப்பாற்ற முயற்சி செய்த போதும் பலனளிக்கவில்லை

இது போதாதென்று குடும்ப பெண்கள் ஆயுததாரிகளின் கால்களில் விழுந்து கதறியபோதும் கூட ஆண்களை அடித்து துன்புறுத்தி கொண்டு சென்றிருந்தார்கள்

இந்த சம்பவத்தில் 119 பொதுமக்கள், ஈபிடிபி மற்றும் இராணுவத்தினரால் இழுத்து செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளனர்

இந்த கொடூரம் நடைபெற்ற இடத்தில் டக்ளஸ் தேவானந்தா இருந்ததை பொதுமக்கள் உறுதி செய்து இருக்கின்றார்கள்

தங்கள் குடும்பத்தில் இரண்டு பேரை பறிகொடுத்த திரு யேசுரட்ணம் என்பவரின் குடும்பத்தினர் இராணுவ தளபதி டென்சில் கொப்பேகடுவ மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரோடு தொடர்புகளை பேணி தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற முயற்சி செய்த விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்புகளில் பதிவு செய்து இருக்கின்றார்கள்

குறிப்பாக திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் கூட தங்கள் முறைப்பாட்டை 12.06.1996 யன்று பதிவு செய்திருக்கின்றார்கள்

ஜனாதிபதி ஆணைக்குழு டக்ளஸ் தேவானந்தாவை விசாரிப்பதாக உறுதி அளித்திருந்த விடயத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்

அதே போல காணாமலாக்கப்பட்ட திரு ரெட்மான் ஜெயசீலனின் தாய் தனது மகனை காப்பாற்ற டக்ளஸ் தேவானந்தாவிடம் அவன் அப்பா இல்லாத பிள்ளை என சொல்லி கெஞ்சியதை பதிவு செய்திருக்கின்றார்

காணாமலாக்கப்பட்ட திரு ஜெயக்குமார் என்பவரின் சகோதரி திருமதி விமலாதேவியும் தன் தம்பிக்காக டக்ளஸ் தேவானந்தவிடம் கதறியதை மனித உரிமை அமைப்புகளிடம் வெளிப்படுத்தி இருக்கின்றார்

இது தவிர காணாமலாக்கப்பட்ட திரு செல்வநாயகம் என்பவரின் தாய் திருமதி ரீட்டமா என்பவரும் தாங்கள் தடுத்து வைத்துள்ள தன் மகனை விடுவிப்பதாக டக்லஸ் தேவானந்தா தனக்கு வாக்கு தந்தாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் சொல்லி இருக்கின்றார்

இந்நிலையில் காணாமலாக்கப்பட்டோர் மண்டைதீவு செம்பாட்டுத்தோட்ட காணி கிணறுகளிலும் மண்டைதீவு தோமையார் தேவாலயப்பகுதி மனிதப் புதைகு*ழிகளிலும் புதைக்கப்பட்டார்கள் என மனித உரிமை அமைப்புகள் சொல்லுகின்றன

விசேடமாக இப்பகுதியுள்ள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள இரு கிணறுகளில் போடப்பட்டு அவ் கிணறுகள் கொங்கிரீட் போடப்பட்டுள்ளதாக சொல்லுப்படுகின்றது

இது தொடர்பான தகவல்கள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) உட்பட இடங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது

நல்லாட்சி அரசாங்க காலத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியாளர் பொன்னையா என்பவர் ஈபிடிபி தொடர்புடைய பல்வேறு அக்கிரமங்களை கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடாக வைத்திருந்த போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

இந்த நிலையில் மண்டைதீவைச் சேர்ந்த திருமதி.சூசைதாஸ் யேசுரட்ணம் தர்மராணி என்ற தாய் தனது இரு பிள்ளைகள் உட்பட்டடோருக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி 2025.04.30 அன்று திரு அனுர குமரா திஸநாயக்காவிற்கு கடிதம் எழுதியிருக்கின்றார்

இது தொடர்பான மிக தெளிவான விரிவான ஆதாரங்களை தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீதரன் இன்று பாராளமன்றத்தில் முன்வைத்திருக்கின்றார்

ஆனால் 1990 ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விகளோடு காத்திருக்கும் பொதுமக்களுக்கு நீதியை பெற்று தர ஜேவிபியும் தயாரில்லை

பட்டலந்த படுகொலைகள் குறித்து விரிவாக பேசும் ஜேவிபி மண்டைதீவு புதைகுழியை வதந்தி என கடந்து போக முயற்சிக்கின்றது

ஜேவிபி யை நியாயப்படுத்த முயற்சிக்கும் அதி புத்திசாலிகள் இப்போதாவது வாயை திறக்க வேண்டாமா?

Recommended For You

About the Author: admin